மராட்டியத்தின் முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே தொடர்ந்து நீடிப்பார்; சஞ்சய் ராவத்
மராட்டியத்தின் முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே தொடர்ந்து செயல்படுவார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தின் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், மாநில முதல்மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அவர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தான். அவரே மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார். வாய்ப்பு கிடைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம்' என்றார்.