காஷ்மீரை ரெயில்வே தடத்தால் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் - ரெயில்வே மந்திரி
காஷ்மீரை ரெயில்வே தடத்தால் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
காஷ்மீர் ஸ்ரீநகர் ரெயில்வே நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
நாட்டின் பிற பகுதிகளுடன்...
அப்போது அஷ்வினி வைஷ்ணவ் மேலும் கூறியதாவது:-
ஜம்முவையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் உதம்பூர்-பனிகால் தண்டவாளப் பணி இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவு பெறும். இதன்மூலம், உதம்பூர்-பாரமுல்லா ரெயில்வே தடப் பணி நிறைவடையும்.
அந்த வகையில், இந்த ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, நாட்டின் பிற பகுதிகளுடன் ரெயில்வே தடத்தால் இணைக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் இங்கு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் ஓடும்.
சவாலான பணிகள்
காஷ்மீரில் புதிய தடங்களில் தண்டவாளங்களை அமைக்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.35 ஆயிரம் கோடி ஆகும். பிரதமர் மோடி பதவியேற்றபின்தான் இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தார். தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாகவும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனால் முக்கியமான சுரங்கப் பாதைகள் உள்பட பெரிய சவாலான பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.
குறிப்பாக, உலகிலேயே உயரமான பாலமாக கருதப்படும் செனாப் ரெயில்வே பாலம், ஒரு பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது. ஈபிள் கோபுரத்தையும் விட உயரமான இந்த பாலத்தின் பணி முடிவடைந்துவிட்டது.
தொங்கு பாலம்
அதேபோல, கம்பிகளால் தாங்கிப் பிடிக்கப்படும் நாட்டின் முதல் தொங்கு ரெயில்வே பாலமான அன்ஜி காட் பாலத்தின் பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவு பெற்று செப்டம்பரில் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும்.
காஷ்மீரில் மின்சார ரெயில் சேவையும் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.