தங்கள் 18 மாத குழந்தை உயிரிழந்ததால் சோகம்; கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை


தங்கள் 18 மாத குழந்தை உயிரிழந்ததால் சோகம்; கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை
x

தங்கள் 18 மாத பெண் குழந்தை உயிரிழந்ததால் சோகமடைந்த கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டம் ராஜ்வாடி கிராமத்தை சேர்ந்த கரண் ஹென்ஹடி (வயது 28) அவரது மனைவி ஷிடல் ஹென்ஹடி (வயது 22). இந்த தம்பதிக்கு 18 மாத பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது உணவு குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதையடுத்து, குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்று உயிரிழந்துவிட்டது.

தங்கள் குழந்தை உயிரிழந்ததில் இருந்தே கரணும் அவரது மனைவி ஷிடலும் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தங்கள் பெண் குழந்தை உயிரிழந்த சோகத்தில் இருந்த கரணும், ஷிடலும் நேற்று ராஜ்வாடி கிராமத்தில் உள்ள கோவில் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கணவன் - மனைவியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், கோவில் அருகே இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் 'அவளிடமே நாங்கள் செல்கிறோம்' என எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கள் 18 மாத பெண் குழந்தை உயிரிழந்த சோகம் தாங்காமல் கணவன் - மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story