இந்தியாவின் முயற்சியால் சாந்திநிகேதன், ஒய்சாலா கோவில்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: பிரதமர் மோடி உரை


இந்தியாவின் முயற்சியால் சாந்திநிகேதன், ஒய்சாலா கோவில்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்:  பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 24 Sept 2023 12:28 PM IST (Updated: 24 Sept 2023 4:11 PM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 உறுப்பு நாடுகளில் ஒன்றாக இணைய செய்ததில், இந்தியாவின் தலைமைத்துவம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அதன் 100-வது அத்தியாயம் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி அன்று நடந்தது. இதுவரை 104 உரைகள் முடிந்துள்ளன.

இந்நிலையில் இன்று 105-வது உரை ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ஆனது பல நூறு ஆண்டுகளுக்கு உலக வர்த்தகம் நடைபெறுவதற்கான அடிப்படையாக உருமாறும்.

ஜி-20 உறுப்பு நாடுகளில் ஒன்றாக ஆப்பிரிக்க யூனியன் இணைய செய்ததில், இந்தியாவின் தலைமைத்துவம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் டெல்லியில் சமீபத்தில் நடந்த ஜி-20 மாநாட்டின்போது, இதுவரை இல்லாத வகையில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் அமைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த மாநாட்டில், ஜி-20 உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியனும் இணைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி சுட்டி காட்டி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், உலக பாரம்பரிய தலங்களாக, ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஆழ்ந்த பெருமைக்குரிய விசயங்கள் ஆகும்.

நம்முடைய வரலாற்று மற்றும் கலாசார ஸ்தலங்கள் உலக பாரம்பரிய தலங்களாக அங்கீகாரம் பெற்றதற்கு அடிப்படை இந்தியாவின் முயற்சியே ஆகும் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார். சமீபத்தில், சாந்திநிகேதன் மற்றும் ஒய்சாலா கோவில்களை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய ஸ்தலங்களாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது.


Next Story