குழந்தையை அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல தடையில்லா போக்குவரத்து வசதி ; போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது


குழந்தையை அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல தடையில்லா போக்குவரத்து வசதி ; போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது
x

சிக்கமகளூருவில் இருந்து மங்களூருவிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு தடையில்லா போக்குவரத்து வசதி செய்து கொடுத்த போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.

சிக்கமகளூரு;

குழந்தை உடல் நலம் பாதிப்பு

சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை ஒன்றுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அந்த குழந்தையை டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் குழந்தையின் உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக மங்களூரு அழைத்து செல்லும்படி ஆலோசனை வழங்கினர்.

அங்கு சென்றால் மட்டுமே குழந்தை உயிர் பிழைக்கும் என்று கூறிவிட்டனர். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். வெகுதூரம் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவேண்டும் என்றால் அதிகளவு நேரம் எடுக்கும் என்று கூறினர். இதை ஏற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனே சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திராவிடம் சாலை போக்குவரத்து சிக்னல்களை ஒழுங்கு செய்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

தடையில்லா போக்குவரத்து வசதி

இந்த கோரிக்கையை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு, டவுன் போலீசாரை அழைத்து தடையில்லா போக்குவரத்து (ஜீரோ டிராபிக்) வசதிகள் செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை அழைத்து சென்றனர். சிக்கமகளூரு டவுன் பகுதியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் சார்மடி மலைப்பகுதியில் உள்ள மூடிகெரே, பனகல், கொட்டிகேஹாரா வழியாக மங்களூரு தனியார் ஆஸ்பத்தியை சென்றடைந்தது.

அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிறுவனின் உயிரை காப்பாற்ற தடையில்லா போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Next Story