ராஜ்யசபை உறுப்பினராக மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்பு
குஜராத்தில் இருந்து பா.ஜ.க.வின் ராஜ்யசபை உறுப்பினராக மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
புதுடெல்லி,
பா.ஜ.க. சார்பில் குஜராத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினராக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் முறைப்படி இன்று பொறுப்பேற்று கொண்டார். ராஜ்யசபை எம்.பி.யாக அவர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மத்திய மந்திரி சபையில் சேர்க்கப்பட்ட அவர், அதன்பின்னர் ராஜ்யசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஜூலையில் நடந்த தேர்தலில், அவர் நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ்-ல் (முன்பு டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், ராஜ்யசபை உறுப்பினராக இன்று பொறுப்பேற்று கொண்டதற்காக பெரிய அளவில் பெருமைப்படுத்தப்பட்டு உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
நாட்டுக்கு சேவையாற்றும் இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக குஜராத் மக்கள், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. ஆகியோருக்கு தனது நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.
அவருடன் சேர்த்து 9 எம்.பி.க்கள் ராஜ்யசபை உறுப்பினராக இன்று பொறுப்பேற்று கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள ராஜ்யசபை அறையில், அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில், பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.