கங்கை ஆற்றில் குளிக்க சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கினர் - தேடும் பணி தீவிரம்
கங்கை ஆற்றில் குளிக்க சென்ற 7 பேர் தண்ணீர் அடித்து செல்லப்பட்ட நிலையில் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை நதி பாய்ந்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் கர்ஜனா பகுதியில் நேற்று சங்கத் (வயது 14), மந்தீப் (வயது 16) ஆகிய இரு சிறுவர்கள் கங்கை நதியில் குளிக்க சென்றனர். அப்போது நதியின் வேகம் காரணமாக இருவரும் நதியில் அடித்து செல்லப்பட்டனர். இரு சிறுவர்களையும் தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், தராகஞ்ச் பகுதியில் உள்ள சமித், விஷால், மகேஷ்வரன், உத்கர்ஷத், அபிஷேக் என 5 பேர் நேற்று கங்கை நதியில் குளிக்க சென்றனர். அப்போது, நதியின் அதிக நீரோட்டம் காரணமாக 5 பேரும் நதியில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 7 பேர் கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.