உ.பி.: துப்பாக்கியுடன் பைக்கில் சாகசம், இளைஞர்கள் கைது; விசாரணையில் போலீசார் அதிர்ச்சி
ஆயுதங்களுடன் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களை கைது செய்த விசாரித்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் லக்னோ நகரில் ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் ஸ்கூட்டி ஒன்றில் வாகனம் ஓட்டி சென்ற நபரை இறுக்கி அணைத்தபடி சிறுமி ஒருவர் சென்ற வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலானது.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பொது இடத்தில் ஆபாச செய்கைகளை பரப்பும் நோக்கில் நடந்து கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருடன் பயணித்த சிறுமி மைனர் என விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில், மற்றொரு வீடியோ ஒன்று நேற்று வைரலானது. அதில், 2 பேர் கையில் ஆயுதங்களை எடுத்து காட்டியபடி, மோட்டார் பைக் ஒன்றில் சாலைகளில் சுற்றி திரிந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, லக்னோ போலீசார் உடனடியாக செயல்பட்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், அதன்பின்னரே அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவர் மீதும் போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.