உ.பி.: ஒரே வாகன பதிவு எண்ணில் பயணித்த பஸ், கார்; வழக்கு பதிவு


உ.பி.: ஒரே வாகன பதிவு எண்ணில் பயணித்த பஸ், கார்; வழக்கு பதிவு
x

உத்தர பிரதேசத்தில் ஒரே வாகன பதிவு எண்ணில் பஸ் மற்றும் கார் பயணித்த நிலையில், சட்ட நடவடிக்கை எடுக்க வழக்கு பதிவாகி உள்ளது.



லக்னோ,


நாட்டில் மோட்டார் வாகன சட்டத்தின்படி, பதிவு எண்களை வாகனங்கள் கொண்டிருப்பது அவசியம். அவை அடையாளம் காண உதவுவதுடன், அரசு பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பதற்கான அடையாளமும் ஆகும். அதனால், பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டுகள் வாகனங்களின் முன்னும், பின்னும் இருக்கும்.

எனினும், வாகன பதிவு எண் ஒவ்வொரு வாகனத்திற்கும் வேறுபடும். ஒரே எண் இரு வேறு வாகனங்களுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படி பயன்படுத்தி வாகனங்களை இயக்குவது சட்டவிரோதம் ஆகும்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் கார் ஒன்று ஓரிடத்தில் சென்று நின்றுள்ளது. அதன் ஓட்டுனர் அருகே இருந்த பஸ் ஒன்றின் வாகன பதிவு எண்ணை பார்த்து உள்ளார். அதன் எண்ணும், அவரது காரின் பதிவு எண்ணும் ஒன்றாக இருந்து உள்ளது.

இதனால், பஸ் ஓட்டுனரிடம் சென்று இதுபற்றி அவர் கேட்டு உள்ளார். ஏறக்குறைய ஒரு மணிநேரம் இருவருக்கும் இடையே ஆலோசனை நடந்த நிலையில், போலீசுக்கு தகவல் சென்று உள்ளது.

உடனடியாக காவல் மற்றும் போக்குவரத்து துறை நடவடிக்கையில் இறங்கினர். உதவி மண்டல போக்குவரத்து அலுவலக அதிகாரி மனோஜ் குமார் கூறும்போது, பஸ் மற்றும் கார் என இரண்டு வாகனங்களும், ஒரே வாகன பதிவு எண்ணை பயன்படுத்தி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில், போலியான அல்லது முறையற்ற வாகன பதிவு எண்ணை பயன்படுத்தி, விதிமீறலில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story