நெதர்லாந்து பெண்ணை திருமணம் செய்த உ.பி. இளைஞர்...!
ஹர்திக் வர்மா நெதர்லாந்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்த இளைஞர் ஹர்திக் வர்மா (32). இவர் வேலை தேடி நெதர்லாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக ஹர்திக்கிற்கு வேலை கிடைத்தது.
அந்த நிறுவனத்தில் நெதர்லாந்தை சேர்ந்த கெப்ரில்லா என்ற இளம்பெண்ணும் வேலை செய்துவந்தார். அப்போது, ஹர்திக் வர்மாவுக்கும், கெப்ரில்லாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக நெதர்லாந்தில் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இறுதியில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த வாரம் நெதர்லாந்தில் இருந்து தனது காதலி கெப்ரில்லாவுடன் ஹர்திக் இந்தியா வந்தார். பதேபூர் வந்த இருவரையும் ஹர்திக்கின் குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் கடந்த புதன்கிழமை இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
காதல் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 11ம் தேதி குஜராத்தின் காந்திநகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கெப்ரில்லாவின் பெற்றோர், உறவினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனை தொடர்ந்து வரும் 25ம் தேதி ஹர்திக் - கெப்ரில்லா தம்பதி நெதர்லாந்து செல்ல உள்ளனர். அங்கு கிறிஸ்தவ மத முறைப்படி இருவரும் மீண்டும் திருமணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.