உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது டிவி-யை ஆப் செய்த மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
லக்னோ,
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இறுதிப்போட்டியை பார்க்கவிடாமல் டிவி-யை ஆப் செய்த மகனை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவரது மகன் தீபக். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கணேஷ் பிரசாத் தனது வீட்டில் டிவி-யில் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, முதலில் இரவு உணவு சமைத்துவிட்டு பின்னர் கிரிக்கெட்டை பார்க்குமாறு கணேஷ் பிரசாத் இடம் மகன் தீபக் கூறியுள்ளார். மேலும், தீபக் டிவி-யை ஆப் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் செல்போன் சார்ஜ் வயரால் மகனின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், தீபக் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகனை கொன்ற கணேஷ் பிரசாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.