உ.பி.: ரெயிலின் ராணுவ பெட்டிக்குள் வைத்து 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீரர்கள்
உத்தர பிரதேசத்தில் ரெயிலின் ராணுவ பெட்டிக்குள் வைத்து 2 பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தெரிய வந்து உள்ளது.
ஜான்சி,
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் வீராங்கனா லட்சுமிபாய் ரெயில் நிலையம் உள்ளது. இதில் நடைமேடை 7-ல் ரெயில் ஒன்று நின்றிருந்தது. இந்நிலையில், உறவினர்களை பார்ப்பதற்காக 2 பெண்கள் அந்த ரெயில் நிலையத்திற்கு வந்து உள்ளனர்.
அவர்கள் தனியாக வந்த நிலையில், இதனை கவனித்த ராணுவ வீரர் ஒருவர், அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்து உள்ளார். அவர், தனது மொபைல் போன் வேலை செய்யவில்லை என்றும் அதனால், உங்களது மொபைல் போனை கொடுங்கள்.
பேசி விட்டு திருப்பி தருகிறேன் என கூறியுள்ளார். அவர்களில் ஒரு பெண் தன்னிடம் இருந்த மொபைல் போனை தந்து உள்ளார். அதனை வாங்கிய ராணுவ வீரர், நடந்தபடியே சென்று ராணுவ பெட்டியில் ஏறியுள்ளார். அவர்களையும் உள்ளே வரும்படி கூறியுள்ளார்.
அந்த பெண்கள் முதலில் தயங்கினர். எனினும் வீரரின் பேச்சை நம்பி, பின்தொடர்ந்து பெட்டிக்குள் சென்று உள்ளனர். ரெயில் பெட்டிக்குள் வேறு 2 ராணுவ வீரர்கள் இருந்து உள்ளனர்.
இதன்பின்னர், நின்றிருந்த ரெயிலின் ராணுவ பெட்டிக்குள் வைத்து 2 பெண்களை ராணுவ வீரர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இதுபற்றி போலீசாருக்கு தொலைபேசி வழியே பெண்கள் இருவரும் அழைப்பு விடுத்து, உதவி கேட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, அரசு ரெயில்வே போலீசாருடன் இணைந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். ராணுவத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதுபற்றி அரசு ரெயில்வே போலீசின் வட்ட அதிகாரி முகமது நயீம் மன்சூரி கூறும்போது, எவரோ சிலரிடம் பேச வேண்டும் என இந்த பெண்களிடம் மொபைல் போனை ராணுவ வீரர் ஒருவர் கேட்டு உள்ளார்.
இவர்களும் நம்பி கொடுத்து உள்ளனர் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பெண்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2 வீரர்களை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 3-வது வீரரை தேடும் பணி நடந்து வருகிறது.
அந்த பெண்கள் பெட்டிக்குள் நுழைந்து மொபைல் போன்களை திருடி விட்டனர் என கைது செய்யப்பட்ட இந்த ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விசாரணை நடத்துவதற்காக அரசு ரெயில்வே போலீசின் காவல் நிலையத்திற்கு ராணுவ அதிகாரிகளும் சென்று உள்ளனர்.