உயிரிழந்த பேரனின் உடலுடன் 10 நாட்களாக வசித்து வந்த மூதாட்டி
உத்தரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர், கடந்த 10 நாட்களாக, தனது வீட்டில் பேரனின் சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரபங்கி,
உத்தரபிரதேசம் மாநிலம் மோஹ்ரிபூர்வா பகுதியில், 65 வயது மூதாட்டி ஒருவர், கடந்த 10 நாட்களாக, தனது வீட்டில் 17 வயது பேரனின் சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோஹ்ரிபூர்வா பகுதியில் உள்ள மிதிலேஷ் என்ற மூதாட்டியின் வீட்டிலிருந்து கடந்த 3-4 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இந்த நிலையில், துர்நாற்றம் தாங்க முடியாமல் அக்கம்பக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து இரவு போலீசார் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு மூதாட்டி சிதைந்த நிலையில் இருந்த தனது பேரன் பிரியான்ஷுவின் உடலுக்கு அருகில் இருந்துள்ளார்.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மூதாட்டியை மனநல மதிப்பீட்டிற்காக அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே சிறுவனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மூதாட்டிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்த மகளும், அவரது கணவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர். இளைய மகள் லக்கிம்பூர் கேரியில் வசிக்கிறார். சிறுவன் பிரியான்ஷு கடந்த சில ஆண்டுகளாக தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.