இந்திய மாணவர் விசா வழங்கும் பணியை விரைவுப்படுத்த வெளிநாடுகளுக்கு வலியுறுத்தல்


இந்திய மாணவர் விசா வழங்கும் பணியை விரைவுப்படுத்த வெளிநாடுகளுக்கு வலியுறுத்தல்
x

ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களிடம் இந்திய மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கும் பணியை விரைவுப்படுத்தும்படி மத்திய வெளிவிவகார அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.



புதுடெல்லி,



இந்தியாவில் இருந்து நடப்பு ஆண்டு மார்ச் 20 வரை மொத்தம் 1,33,135 இந்திய மாணவர்கள் உயர் படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்று உள்ளனர் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 163% ஆக விரைவாக அதிகரித்தது.

இதன்படி, 1,45,539 பேர் சென்றுள்ளனர். ஆனால், கடந்த 2006ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 25% அளவுக்கே வளர்ச்சி அடைந்தது. இதன்படி, 1,81,872 பேர் சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு வெளியே 10 லட்சத்திற்கும் கூடுதலான இந்திய மாணவர்கள் 85 நாடுகளில் படித்து வருகின்றனர். வடஅமெரிக்காவில் 50%க்கும் கூடுதலான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, ஜெர்மனி, நியூசிலாந்து, போலந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்களிடம் இந்திய மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கும் பணி பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

இந்த பணியை விரைவுப்படுத்தும்படி குறிப்பிட்ட நாடுகளின் தூதர்களிடம் மத்திய வெளிவிவகார அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளதுடன், அதில் தெளிவான தன்மையை கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது.


Next Story