விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை 'கைவிலங்கு' மாட்டி கட்டிப்போடுங்கள் - அதிரடி உத்தரவு
விமானத்தில் கட்டுக்கடங்காமல், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு கைவிலங்கு மாட்டுங்கள் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி,
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் பயணித்தது. இந்த விமானத்தில் 'பிசினஸ்' வகுப்பில் வயதான பெண் (72 வயது) பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அந்த விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்தபோதும் பணியில் இருந்த ஏர் இந்தியா பிரச்சினையை சரிசெய்வதிலேயே குறியாக இருந்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் டெல்லிக்கு வந்த பின் ஆன்லைன் மூலம் தனது அதிருப்தி மற்றும் புகாரை ஏர் இந்தியா தலைமைக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும், சரிவர நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனை தொடர்ந்து பெண் பயணி புகார் அளித்தும் விமான ஊழியர்கள், விமான நிறுவனமும் சரிவர நடவடிக்கை எடுக்காதல்தால் ஏர் இந்தியா நிறுவனம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா 30 நாட்கள் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த விமான போக்குவரத்து ஒழுக்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சங்கர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள சங்கர் மிஸ்ரா மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்துகொண்ட சங்கர் மிஸ்ராவை அவர் வேலை செய்து வரும் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வரும் வால்ஸ் பெர்கொ நிதி நிறுவனத்தின் துணை தலைவராக சங்கர் மிஸ்ரா செயல்பட்டு வந்தார். தற்போது அவரை பணியில் இருந்து நீக்கி வால்ஸ் பெர்கொ அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஏர் இந்தியா பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகாரமான நிலையில் கடும் விமர்சனங்களுக்கு பின் இந்திய விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.
அதன்படி, விமானத்தில் கட்டுக்கடங்காமல், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு கைவிலங்கு மாட்டுங்கள் என விமான ஒழுங்கு முறை ஆணையம் விமான நிறுவன ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும்பட்சத்தில் ஒழுங்கீனமாக செயல்படும் பயணிகளை கைவிலங்கு மாட்டி கட்டிப்போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கைவிலங்கு, பெல்ட் உள்ளிட்டவற்றை விமானத்திற்குள் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் கட்டுக்கடங்காமல், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.