உத்தரபிரதேசம்: பயிர்க் கொள்ளை வழக்கில் சம்பந்தபட்ட 10 போலீசாரின் சொத்துக்களை முடக்க கோர்ட்டு உத்தரவு
பயிர்க் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை முடக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் அருகே உள்ளது ஜாரியா கிராமம். இங்கு 1999-ம் ஆண்டு மாலி பிரசாத் திவாரி என்பவாின் 4.8 ஏக்கர் நிலத்தை ராம்பால் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கினார். அடுத்த வருடமே நிலத்தை திரும்பப் பெற்று தானே பயிரிட்டார்.
இந்த நிலையில் ராம்பால், தனது கூட்டாளி பப்பு என்பவருடன் சேர்ந்து, போலீசாரின் துணையுடன், மாலி பிரசாத் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாலிபிரசாத் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் கோர்ட்டில் முறையிட்டார். கடந்த 14-ந் தேதி வழக்கை விசாாரித்த சிறப்பு நீதிபதி, குற்றவாளிகளை கைது செய்து 21-ந்தேதி ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 10 போலீசாருக்கு தொடர்பு உள்ளது. அதில் 7 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும், கைது செய்ய இயலவில்லை என்றும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை முடக்க கோர்ட்டு உத்தரவிட்டது.