வாஸ்து ஜோதிடர் சந்திரசேகர் குருஜி கொலை: தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுத்ததால் கொன்றேன்
தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுத்ததால் சந்திரசேகர் குருஜியை கொலை செய்ததாக கைதான மகாந்தேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உப்பள்ளி;
குருஜி கொலை
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் போடகிகல்லு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் குருஜி (வயது 59). பிரபல வாஸ்து ஜோதிடரான இவர், பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வாஸ்து கூறி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி உப்பள்ளி உன்கல் பகுதியில் தனியார் ஓட்டலில் வைத்து அவரை 2 பேர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக மகாந்தேஷ், மஞ்சுநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலையில் மகாந்தேஷ் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
தொல்லை கொடுத்ததால் கொன்றேன்
சந்திரசேகர் குருஜியிடம் 2012-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தேன். வாஸ்து கூறுவதற்கு எங்கு சென்றாலும் நானும் உடன் செல்வேன். மேலும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன். இதனால் என் மீது அவருக்கு அதிகளவு பற்று ஏற்பட்டது.
இதனால் என் பெயரில் அதிகளவு சொத்து வாங்கினார். அவரது சொத்துகளுக்கு பினாமியாக இருந்தேன். எனது காதலி வனஜாக்ஷியையும் குருஜியின் அலுவலகத்தில் பணிக்கு சேர்த்துவிட்டேன்.
கடந்த 2016-ம் ஆண்டு 2 பேரும் திருமணம் செய்து கொண்டோம். திடீரென்று சந்திரசேகர் குருஜி என்னை மும்பைக்கு மாற்றினார். நான் மும்பை செல்ல மறுப்பு தெரிவித்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் பணியில் இருந்து நின்றுவிட்டேன்.
அதன் பின்னர் சொந்தமாக தொழில் செய்தேன். ஆனால் சந்திரசேகர் குருஜி என்னை தொழில் செய்ய விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். நான் எங்கு சென்றாலும் அவரது இடையூறு இருந்தது. மேலும் அடிக்கடி செல்போனில் அழைத்து மிரட்டி வந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
இதற்காக என்னுடன் பணியாற்றிய மஞ்சுநாத்தின் உதவியை நாடினேன். இருவரும் சேர்ந்து கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் டி.ஜி.பி. விசாரணை
இந்த நிலையில் கொலை நடந்த ஓட்டலில் நேற்று கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அலோக் குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், ஓட்டல் ஊழியர்கள், காவலாளிகள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தினார். மேலும் அங்கு பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர், உப்பள்ளி வித்யாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து போலீசாரிடம் விசாரித்தார்.