சர்வர் பிரச்சினை என கூறி உணவு பொருட்கள் வழங்க மறுப்பு: ேரஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


சர்வர் பிரச்சினை என கூறி உணவு பொருட்கள் வழங்க மறுப்பு: ேரஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சர்வர் பிரச்சினை என கூறி உணவு பொருட்கள் வழங்க மறுத்து வந்ததால் ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் குமாரசாமி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிக்கமகளூரு:

சர்வர் பிரச்சினை

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெர தாலுகா சன்னஹடலு கிராமத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் அதன் உரிமையாளர், பொதுமக்களுக்கு சரியான முறையில் உணவு பொருட்கள் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ரேஷன் கடையில் சர்வர் பிரச்சினை என கூறி, மக்களை நீண்ட நேரம் காக்க வைத்ததுடன், அவர்களை திருப்பி அனுப்பி வந்ததாக தெரிகிறது.

மேலும், சர்வர் பிரச்சினையை காரணம் காட்டி அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை ரேஷன் கடை உரிமையாளர் வழங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கிராம மக்கள் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சர்வர் பிரச்சினை என கூறி ரேஷன் கடை உரிமையாளர் உணவு பொருட்கள் வழங்காமல் உள்ளார். நாங்கள் நீண்ட நேரமாக காத்திருந்து ஏமாந்து செல்கிறோம்.

உணவு பொருட்களுக்காக கூலி வேலைக்கு செல்லாமல் கால்கடுக்க காத்திருக்கிறோம். இதனால் எங்களுக்கு ஒருநாள் கூலி கிடைக்காமல் போவதுடன், உணவு பொருட்களும் கிடைப்பதில்லை. இதனால் ரேஷன் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்த மூடிகெரே தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குமாரசாமி, சன்னஹடலு கிராமத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கிராம மக்களை சமாதானப்படுத்தினார். குமாரசாமி எம்.எல்.ஏ. கூறுகையில், இந்த ரேஷன் கடையில் ஒரே ஒரு சர்வர் மட்டும் தான் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி நெட்வொர்க் பிரச்சினை இருக்கிறது. இதனால் அடிக்கடி சர்வர் பாதிக்கப்பட்டு உணவு பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சர்வர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் முதல் சர்வர் மாற்றப்பட்டு எந்த பிரச்சினையும் இன்றி உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.

எம்.எல்.ஏ.வின் உறுதிமொழியை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story