பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டி கிராம மக்கள் போராட்டம்
மழைக்கு வீடுகளில் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பூட்டுபோட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மைசூரு:
மைசூரு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. பகல் நேரத்தில் வெயில் இருந்தாலும், இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழைக்கு டி.நரசிப்புரா தாலுகாவை சேர்ந்த வாட்டாளு கிராமத்தில் உள்ள சிவலிங்கே கவுடா, நஞ்சம்ம என்பவர்களுக்கு சொந்தமான வீடுகளின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. மேலும் சில வீடுகள் சேதம் அடைந்தது. இந்த நிலையில் சுவர்களின் பக்கத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இந்த வெள்ளப்பெருக்கினால் ஆக்ரோஷம் அடைந்த மக்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து இரவு முழுவதும் அங்கேயே தங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தும் அதிகாரிகள் அங்கு வராததால் மேலும் ஆக்ரோஷமடைந்த பொது மக்கள் அலுவலகத்தை பூட்டி போட்டு அதிகாரிகள் உள்ளே நுழையாதவாறு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது மக்கள், தங்களின் கிராமத்திற்கு தரமான சாலை, கால்வாய் அமைக்காமல் இருந்ததால் தான் தங்கள் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததாக குற்றம் சாட்டினர்.