சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்
சிக்கமகளூரு அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு அருகே கப்பிகெேர கிராமத்தில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. சாலையை சீரமைக்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப்பகுதி மக்கள் மற்றும் தலித் அமைப்பினர் சாலையை சீரமைக்க கோரி நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் மாகடி-கப்பிகெரே சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், சாலையை சீரமைக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர்.
இந்த சாலை மறியலால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.