சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேருக்கு கிராம மக்கள் தர்ம-அடி


சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேருக்கு கிராம மக்கள் தர்ம-அடி
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சினிமா பாணியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேரை பிடித்து கிராம மக்கள் தர்ம-அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிக்கமகளூரு;

சந்தன மரம்

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா தேவரபெலகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் தனது வீட்டின் முன்பு சந்தன மரம் ஒன்றை வளா்த்து வந்தார். அந்த மரத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த மரத்தை வெட்ட மர்மநபர்கள் சிலர் முயற்சித்து வந்தனர்.

இந்த நிலையில் அவா்கள் அந்த மரத்தை வெட்டி கடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் சினிமா பாணியில் திட்டம் தீட்டினர். இதையடுத்து அவர்கள் நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் சத்தம் போட்டுவிடும் என்று எண்ணி கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களுக்கு போட்டுள்ளனர்.

கதவை தாழிட்டு

பின்னர் அவர்கள் மரம் வெட்டும் சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என்று எண்ணி அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளை வெளிப்பக்கமாக தாழிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சந்தனமரத்தை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவர், மரம் வெட்டும் சத்தம்கேட்டு பின்பக்க கதவை திறந்து வந்து பாா்த்துள்ளார்.

அவர் மர்மநபர்கள் மரத்தை வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் பிற வீடுகளின் கதவையும் திறந்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் விரைந்து வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் 2 பேர் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.

தர்ம-அடி

மரத்தில் இருந்த 2 பேரை ெபாதுமக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து ஹரிஹரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சிக்கமகளூருவை சேர்ந்த லவக்குமார்(வயது 28) மற்றும் துமகூருவை சேர்ந்த இம்ரான்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து வெட்டிய சந்தன மரக்கட்டைகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story