தேர்தல் நடத்தை விதியை மீறிதுண்டு பிரசுரம் அச்சடித்த ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் மீது வழக்கு பதிவு
சிவமொக்காவில் தேர்தல் நடத்தை விதியை மீறி துண்டு பிரசுரம் அச்சடித்த ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் தேர்தல் நடத்தை விதியை மீறி துண்டு பிரசுரம் அச்சடித்த ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதி மீறல்
கர்நாடகத்தில் மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்களை மறித்து சோதனை செய்வதுடன், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்யும் வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாரதா அப்பாஜி கவுடா தேர்தல் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது சாரதா அப்பாஜி கவுடா தேர்தல் பிரசாரத்திற்காக சிவமொக்கா கே.ஆர்.புரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் கன்னடம், உருது மொழிகளில் துண்டு பிரசுரங்களை அச்சடிக்கும்படி கூறியுள்ளார். அதன்படி தனியார் அச்சகத்தின் உரிமையாளர் அப்துல் கலாம் துண்டு பிரசுரங்களை அச்சடித்து வைத்திருந்தார்.
வழக்கு பதிவு
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனியார் அச்சகத்திற்கு சென்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 5 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் சாரதா அப்பாஜி கவுடா தேர்தல் நடத்தை விதியை மீறி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சாரதா அப்பாஜி கவுடா மற்றும் தனியார் அச்சகத்தின் உரிமையாளர் அப்துல் கலாம் மீது தொட்டபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.