நள்ளிரவு தெருவில் சுற்றித்திரிவது குற்றமல்ல - கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்த கோர்ட்டு
நள்ளிரவு 1.30 மணியாக இருந்தால் என்ன? தெருவில் சுற்றித்திரிந்ததாக கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் கிர்கான் பகுதியில் கடந்த 13-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டு ஒரு நபர் சாலையோரம் அமர்ந்திருந்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் உத்தரபிரதேச மாநிலம் சுமித் கஷ்யப் (வயது 29) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, நள்ளிரவு முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தெருவில் சுற்றித்திரிந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் சுமித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த கைது தொடர்பான வழக்கு கிர்கான் மாஜிஸ்திரேட் கோர்ட்டு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மும்பையில் நள்ளிரவு 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை போன்ற நகரங்களில் நள்ளிரவு 1.30 மணி என்பது மிகவும் நீண்டநேரமல்ல. யார் வேண்டுமானாலும் சாலையில் நிற்கலாம். ஆகையால், குற்றம் செய்யும் நோக்கத்தோடு முகத்தை மூடிக்கொண்டு நின்றதாக கருத முடியாது. நள்ளிரவு 1.30 மணியாக இருந்தாலும் அது நீண்ட நேரமல்ல. அதுமட்டுமின்றி இரவு நேர ஊரடங்கு அமலில் இல்லாதபோது தெருவில் சுற்றித்திரிவதும் குற்றமல்ல. மும்பையில் இரவு நேர ஊரடங்கு தற்போது இல்லை. ஆகையால், குற்றச்சாட்டப்பட்ட நபர் இரவு சாலையில் சுற்றித்திரிவது குற்றமல்ல. இது கொரோனா காலம். பாதுகாப்பிற்காக மக்கள் முகக்கவசம் அணிகின்றனர். முகக்கவசம் கட்டாயமில்லாதபோதும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் இல்லாதபோது சிலர் கைக்குட்டையை முகக்கவசமாக அணிகின்றனர். குற்றச்சாட்டபட்ட நபர் தனது கைக்குட்டையை முகத்தில் கட்டியிருந்ததால் அவர் தனது அடையாளத்தை மறைக்க முயற்சிக்கிறார் என்று அர்த்தமல்ல' என நீதிபதி தெரிவித்தார்.
பின்னர், கைது செய்யப்பட்ட நபர் நிரபராதி எனவும் அவர் மீதான வழக்கை ரத்து செய்த கோர்ட்டு, அவரை விடுதலை செய்ய போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.