கர்நாடகத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து வார்டு மறுவரையறை பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து வார்டு மறுவரையறை பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
பெங்களூரு: கர்நாடகத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து வார்டு மறுவரையறை பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வார்டு மறுவரையறை பணிகள்
கர்நாடகத்தில் மாவட்ட பஞ்சாயத்து-தாலுகா பஞ்சாயத்து கவுன்சிலர்களின் பதவி காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. கர்நாடக அரசு வார்டு மறுவரையறை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய ஒரு ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. இதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் ஒரு கவன கடிதத்தை வழங்கியது. இதுகுறித்த விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஒரு கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து வார்டுகள் மறுவரையறை பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பணிகளை முடிக்க 12 வாரங்கள் காலஅவகாசம் வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
அவகாசம் கோரக்கூடாது
கர்நாடக அரசின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, வார்டு மறுவரையறை பணிகள் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும், மேலும் காலஅவகாசம் கோரக்கூடாது என்றும், 12 வாரங்களுக்கு பிறகு அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.