ஒடிசா ரெயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை -ரெயில்வே மந்திரி பேட்டி


ஒடிசா ரெயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை -ரெயில்வே மந்திரி பேட்டி
x

ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து உள்ளது. விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருக்கிறார்.

புதுடெல்லி,

ஒடிசாவில் கடந்த 2-ந்தேதி நிகழ்ந்த ரெயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது.

275 பேர் சாவு

அங்குள்ள பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது.

நெஞ்சை பதற வைக்கும் இந்த கோர விபத்தில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 275 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 1,175 பேர் காயமடைந்து இருக்கின்றனர்.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. முக்கியமாக அரசு மற்றும் ரெயில்வேத்துறைக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

உயர்மட்ட விசாரணை

இதை கண்டுபிடித்து எதிர்காலத்தில் இது போன்ற கோரங்கள் நிகழாமல் தடுப்பதற்காக, உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே அமைச்சகம்உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த விபத்தின் பின்னணியில் தொழில்நுட்ப கோளாறு இருக்குமோ? மனித தவறுகள் காரணமாக இருக்குமோ? ஏதேனும் சதிவேலை காரணமோ? என பல்வேறு கோணங்களில் இந்த குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த இடம் மற்றும் சிக்னல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களில் இந்த குழுவினர் நடத்திய விசாரணையில் விபத்துக்கான காரணம் பிடிபட தொடங்கி உள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ்

இதை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷணவ் நேற்று விவரித்தார். அதாவது விபத்துக்கான மூல காரணமும், அதற்கு காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறினார்.

எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் எனக்கூறிய அவர், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மற்றும் ரெயில்வே சிக்னல் அமைப்பில் முக்கிய கருவியாக இருக்கும் எலக்ட்ரிக் பாயின்ட் எந்திரத்தின் அமைப்பு மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதன் மூலம் மனித தவறே (நாசவேலை) விபத்தின் பின்னணியில் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ரெயில்வே அதிகாரிகள் சிலரும் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

தவறு நிகழாதவை

அந்தவகையில் ரெயில்வே சிக்னலிங் துறையின் முதன்மை செயல் இயக்குனர் சந்தீப் மாத்தூர் கூறியதாவது:-

என்ஜின் டிரைவருக்கு முன்னால் உள்ள பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை டிரைவருக்கு உறுதிப்படுத்தும் வகையில் சிக்னல் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது (இன்டர்லாக்).

ரெயிலை நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்ல இந்த இன்டர்லாக்கிங் அமைப்பு சிறப்பானதாகும். இது எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக் இல்லா முறை என 2 வகையாக உள்ளது.

ஆனால் இந்த 2 வகையும் 'தவறு நிகழாதவை' மற்றும் 'தோல்வியற்றவை' என நிரூபிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

இவ்வாறு சந்தீப் மாத்தூர் கூறினார்.

நாசவேலையாக இருக்கலாம்

மேலும் பெயர் வெளியிட விரும்பாத மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பில் இத்தகைய மாற்றம் செய்வது ''வேண்டுமென்றே'' மட்டுமே இருக்கும். அந்தவகையில் உள்ளே இருந்தவர்கள் அல்லது வெளியில் இருந்து வந்தவர்களின் சேதப்படுத்துதல் அல்லது நாசவேலையாக இருக்கலாம். நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை' என்று தெரிவித்தார்.

இதைப்போல ரெயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு உறுப்பினர் ஜெயா வர்மா சின்கா கூறியதாவது:-

பச்சை சிக்னல் கிடைத்தால் தனக்கான பாதை தெளிவாக இருக்கிறது, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் செல்லலாம் என டிரைவர் புரிந்து கொள்வார். அந்தவகையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்கிறது.

அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வந்தது

இந்த ரெயிலுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் 130 கி.மீ. ஆகும். அதன்படி அதன் டிரைவரும் 128 கி.மீ. வேகத்தில் ரெயிலை ஓட்டி வந்துள்ளார்.

பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் 126 கி.மீ. வேகத்தில் வந்துள்ளது. 2 ரெயில்களும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக வேகத்தில் இயக்கப்படவில்லை.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைனில் நுழைந்துள்ளது. அங்கு ஏற்கனவே நின்றிருந்த இரும்புத்தாது ஏற்றியிருந்த சரக்கு ரெயில் மீது மோதியுள்ளது.

இன்டர்லாக்கிங் அமைப்பு பாதுகாப்பான அமைப்பு என உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது இதில் பழுது ஏற்பட்டால் அனைத்து சிக்னல்களும் சிவப்புக்கு மாறிவிடும். இதன் மூலம் அனைத்து ரெயில் இயக்கமும் நிறுத்தப்படும்.

ஆனால் சிக்னலிங் அமைப்பில்தான் கோளாறு என ரெயில்வே மந்திரி கூறியுள்ளார். அப்படியானால் இது மனித தவறாகவே இருக்க முடியும். கேபிள்களை பார்க்காமல் யாரோ தவறிழைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு ஜெயா வர்மா சின்கா கூறினார்.

சி.பி.ஐ. விசாரணை

இதன் மூலம் இந்த விபத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் டிரைவர்களின் தவறு என்ற கூறுகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருக்கலாமோ? என சந்தேகங்கள் வலுப்பெற தொடங்கி உள்ளன.

எனவே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக நேற்று மாலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், '275 உயிர்களை பலிகொண்டு, 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கு காரணமான 3 ரெயில்கள் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்' என தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கும் ஒடிசா ரெயில் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பது அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story