வயநாடு நிலச்சரிவு; முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல்) நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த நிதி உதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.