ரெயில் விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்க ஒடிசா அரசுடன் தொடர்பில் உள்ளோம்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


ரெயில் விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்க ஒடிசா அரசுடன் தொடர்பில் உள்ளோம்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x

ரெயில் விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்க ஒடிசா மாநில அரசுடன், கர்நாடக அரசு நிரந்தரமாக தொடர்பில் இருந்து வருவதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஒடிசா அரசுடன் தொடர்பில்...

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து சம்பவத்தில் சிக்கி உள்ள கன்னடர்களை பாதுகாப்பாக மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கன்னடர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தி உள்ளேன். கன்னடர்களை மீட்க தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, அவர்களும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர்.ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை போன்று பெரிய அளவிலான விபத்து நடந்ததில்லை. இந்த ரெயில் விபத்தில் கர்நாடகத்தை பற்றிய எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. கன்னடர்களை பத்திரமாக மீட்க ஒடிசா அரசுடனும், மத்திய ரெயில்வே துறை அதிகாரிகளுடனும் கர்நாடக அரசு நிரந்தரமாக தொடர்பில் இருந்து வருகிறது.

எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

ஒடிசா ரெயில் விபத்து சம்பந்தமாக யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்து பற்றி பொதுமக்கள் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அரசு சார்பில் தொலைபேசி மற்றும் செல்போன் எண்களும் வெளியிடப்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது முதற்கட்டமாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகத்தை சேர்நதவர்கள் ஒடிசாவுக்கு சென்றுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்டு வருவது அரசின் பொறுப்பாகும். யாரும் அச்சமடைய தேவையில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story