மகாத்மா காந்தியின் தத்துவங்களை நாம் பின்பற்ற வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
மகாத்மா காந்தியின் தத்துவங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
திறந்த புத்தகம்
மகாத்மா காந்தி தனது வாழ்க்கையில் பல முறை அவமதிக்கப்பட்டார். ஆனால் அதற்கு எதிராக அவர் நின்றார். போராடினார். நாட்டின் நலனுக்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நமது நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்தார். உண்மை, அஹிம்சை ஆகிய 2 ஆயுதங்களை அவர் நமது நாட்டிற்கு வழங்கினார்.
இந்த போராட்டத்தின் மீது பலர் சந்தேகத்தை கிளப்பினர். ஆனால் நாட்கள் கடந்து, மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர். இதன் மூலம் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு வெளியேறினர். காந்தி, தனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், இதுவே நாட்டு மக்களுக்கு எனது செய்தி என்று கூறினார். காந்தியின் போராட்டம் சுதந்திரத்தோடு முடிவடைந்து விடவில்லை. பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கைக்காகவும் அவர் போராடினார்.
அர்ப்பணிக்க வேண்டும்
நாட்டை அடிமட்டத்தில் இருந்து கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிராம சுவராஜ்ஜியம் என்ற முழக்கத்தை அவர் முன்வைத்தார். காந்தியின் பாதையை நாம் பின்பற்றுவதால் இந்தியா பலம் அடைந்துள்ளது. அத்துடன் மக்கள் சந்தோஷமாக வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனாம் நாம் காந்தியின் தத்துவங்களை பின்பற்ற வேண்டும். நாம் நம்மை நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாளும் இன்று (நேற்று) கொண்டாடப்படுகிறது. லால்பகதூர் சாஸ்திரி குறைந்த காலம் மட்டுமே பிரதமராக இருந்தார். ஆனால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார். அவர் ஏழை குடும்பத்தில் பிறந்து உயர்ந்த பதவியை அடைந்தார். நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய அவர் அடித்தளம் அமைத்தார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.