'பைக் டாக்சியை தடை செய்யவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்'


பைக் டாக்சியை தடை செய்யவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்
x

பைக் டாக்சியை தடை செய்யவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆட்டோ டிரைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு:-

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வாடகை ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் இருந்து வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு ஆட்டோக்களின் பங்கு இன்றியமையாதது. எனினும் சில ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பலரும் வாடகை ஆட்டோக்களுக்கு பதிலாக, பைக் டாக்சிக்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகள் குறித்த நேரத்தில், குறைந்த செலவில் செல்ல முடிவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பைக் டாக்சி டிரைவர்கள் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பைக் டாக்சி சேவையை அரசு தடை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் ஆட்டோ டிரைவர்கள், தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் 'வாடகைக்கு ஆட்டோக்களை ஓட்டி தான், குடும்பத்தை நடத்தி வருகிறோம். பெற்றோரின் மருத்துவ செலவுகள், பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆட்டோ இயங்கினால் தான் முடியும். ஆனால் தற்போது பைக் டாக்சி சேவையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து வாங்குவதற்கு கூட பணம் இல்லை. இதே நிலை நீடித்தால் என்னவாகுமோ என்று ஆட்டோ டிரைவர்கள் கூறி இருந்தனர்.

கடந்த வாரம் பல்லாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு பேசுகையில், 'தேர்தலுக்கு முன்பு ஆட்டோ டிரைவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்' என கூறினார். அதுதொடர்பாக 29-ந் தேதி(நாளை) அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அந்த கூட்டத்தில் பயனுள்ள தகவல் வெளியாகவில்லை என்றால், விமான நிலைய சாலை, மாநகராட்சி சர்க்கிள் பகுதிகளை ஆட்டோக்களை கொண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story