நாங்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் ஊழலை மூடிமறைக்க மாட்டோம்
நாங்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் ஊழல் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சி செய்ய மாட்டோம் என்றும், பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கூறினார்.
பெங்களூரு-
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஊழல் பகிரங்கமாகிறது
பா.ஜனதாவை சேர்ந்த மாடால் விருபாக்ஷப்பா மகன் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தகவல் அறிந்தேன். கர்நாடகத்தில் லோக்அயுக்தாவின் அதிகாரத்தை பறித்து ஊழல் தடுப்பு படையை சித்தராமையா அரசு ஏற்படுத்தியது. எங்கள் ஆட்சியில் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்துவிட்டு லோக்அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய நிகழ்வுகள் நடந்தன. ஆனால் அப்போது லோக்அயுக்தாவுக்கு அதிகாரம் வழங்காததால், அவற்றை மூடிமறைத்துவிட்டனர்.
எங்கள் ஆட்சியில் இத்தகைய ஊழல் விவகாரங்கள் பகிரங்கமாகிறது. மாடால் விருபாக்ஷப்பா மகன் விவகாரத்தில் விசாரணை பாரபட்சமின்றி நேர்மையான முறையில் நடைபெறுகிறது. லோக்அயுக்தா ஒரு தன்னிச்சையான அமைப்பு. சிக்கியுள்ள பணத்தின் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்துவார்கள். இந்த விவகாரத்தில் அனைத்து தகவல்களும் வெளியே வர வேண்டும். அந்த பணம்யாருடையது என்பது தெரிய வேண்டும்.
முயற்சி செய்ய மாட்டோம்
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சித்தராமையா ஆட்சியில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மீது 59 ஊழல் வழக்குகள் இருந்தன. ஊழல் தடுப்பு படை இருந்ததால் அவற்றை மூடிமறைத்துவிட்டனர். லோக்அயுக்தாவின் அதிகாரத்தை ஏன் பறித்தனர் என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும். ஆனால் நாங்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் ஊழல் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சி செய்ய மாட்டோம்.
காங்கிரசாரின் ஊழல்கள் குறித்து லோக்அயுக்தா விசாரணை நடத்தினால், அனைத்து உண்மைகளும் வெளிவரும். அதனால் காங்கிரஸ் கட்சி தாங்கள் ஊழல் செய்யாத சுத்தமானவர்கள் என்று கூற முடியாது. கலால்துறை, தொழிலாளர் நலத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் லோக்அயுக்தா விசாரணை நடைபெறும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.