மணிப்பூர்: பா.ஜ.க. எம்.எல்.ஏ வீட்டின் முன் திருடிய துப்பாக்கிகளை போட்டு செல்ல பெட்டி
மணிப்பூரில் திருடிய ஆயுதங்களை திருப்பி வைக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. வீட்டின் முன் திருடிய துப்பாக்கிகளை போட்டு செல்ல பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர்,
மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில் ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆனால், குகி என்ற பழங்குடி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் எஸ்.டி. பிரிவில் தங்களை சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் அவர்கள் கும்பலாக பேரணி நடத்தினர். மே 3-ந்தேதி நடந்த இந்த பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.
மணிப்பூரில் கலவரம் வெடித்தபோது காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் சூறையாடப்பட்டன. வெடிமருந்துகளுடன் 4,000 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வெவ்வேறு இடங்களில் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன.
இவற்றில் 900 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வெடிமருந்துகள் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் சோதனை நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டன. முதல்வர் என். பிரேன் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருடிய ஆயுதங்களை திருப்பி வைக்க இம்பாலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வீட்டின் முன் திருடிய துப்பாக்கிகளை போட்டு செல்ல பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பெட்டியில் உள்ள லேபிளில், "நீங்கள் பறித்த ஆயுதங்களை இங்கே விடுங்கள். தயங்காமல் செய்யுங்கள்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களை வீச வரும் எவரும் விசாரிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும்படி கேட்கப்பட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.