கள்ளக்காதல் ஜோடியை துடிக்க துடிக்க பிரம்பால் அடித்த சம்பவம்... மம்தா பானர்ஜியிடம் அறிக்கை கேட்ட ஆளுநர்
கட்டப்பஞ்சாயத்து முடிவின்படி கள்ளக்காதல் ஜோடியை கொடூரமாக தாக்கிய தஜிமுல் என்ற ஜே.சி.பி.யை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் ஒரு ஆணையும், பெண்ணையும் துடிக்க துடிக்க பிரம்பால் தாக்கிய சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது. அடி வாங்கிய ஆணும், பெண்ணும் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கிராமத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்தில் அவர்களுக்கு பிரம்படி தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதை நிறைவேற்றுவதற்காகவே அவர்களை ஒருவர் மூங்கில் பிரம்பால் அடித்ததாக தெரிய வந்தது.
கடந்த 28-ம் தேதி நடந்த இந்த கொடூர தாக்குதல் தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டப்பஞ்சாயத்து முடிவின்படி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தஜிமுல் என்ற ஜே.சி.பி.யை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்ந்து பேசுபொருளான நிலையில், இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆளுநர் ஆனந்த போஸ் கேட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பார்த்து கவர்னர் அதிர்ச்சியடைந்ததாகவும், இது காட்டுமிராண்டித்தனம் என்று கண்டனம் தெரிவித்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.