மே.வங்காள பஞ்சாயத்து தேர்தலின் தி.காங்கிரஸ் 'ரத்தத்துடன் விளையாடியது' - பிரதமர் மோடி கடும் தாக்கு
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் "இரத்தத்துடன் விளையாடியது" என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசினார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் "இரத்தத்துடன் விளையாடியது" என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசினார்.
மேற்கு வங்காள மாநிலத்தின் ஷேத்திரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழச்சியில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பேசினார்.அதில் இது குறித்து அவர் கூறியதாவது ,
மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது வாக்காளர்களை (திரிணாமுல் காங்கிரஸ்) மிரட்டினர். அவர்களது வாழ்க்கையை நரகமாக்கினர். ஜனநாயகத்தின் வெற்றியாளர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்பவர்கள்தான் மின்வாக்குப் பதிவு இயந்திரத்தை ஒழிக்க சதி செய்கிறார்கள்.திரிணாமுல் காங்கிரஸ் அபாயகரமான தாக்குதல்களை நடத்தி வேலையை முடித்துக் கொள்கின்றனர் என்று கூறினார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பெரிய அளவில் வன்முறை நடைபெற்றது. இது தேசிய அளவில் பேசப்பட்டது. அதேவேளை, தேர்தலில் அதிக இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது.
மாநிலத்தில் உள்ள அனைத்து 20 ஜில்லா பரிஷத்களையும் திரிணமூல் வென்று இருந்தது. மேலும் ஏறக்குறைய 80 சதவிகிதம் (மொத்தம் 3,317 இல் 2,641) கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 92 சதவிகிதம் (மொத்தம் 341 இல் 313) பஞ்சாயத்து சமிதிகளை வென்று இருந்தது. மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போதும், பின்னரும் மொத்தம் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குப்பதிவு நாளில் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.