பாகிஸ்தானில் மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் - இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்
பாகிஸ்தானில் உள்ள இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இந்து, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் கோரங்கி நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான மாரி அம்மன் கோவில் மீது கும்பல் நேற்று தாக்குதல் நடத்தினர். வழிபாட்டு தலத்தில் இருந்த இந்து மத கடவுள் சிலைகளை அந்த கும்பல் அடித்து நொறுக்கியது. தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்கள் யார் என்பது குறித்து பாகிஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இந்து மத வழிபாட்டு தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் இன்று கூறுகையில், சமீபத்தில் கராச்சியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மதத்தினர் மீது நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான துன்புறுத்தல்களில் இதுவும் ஒன்று என நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பான எங்கள் கண்டனத்தை பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்துள்ளோம். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதிபடுத்தும்படி அந்நாட்டு அரசிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது' என்றார்.