திருமணம் எப்போது...? காஷ்மீர் மாணவிகளுடன் ராகுல் காந்தி நடத்திய ருசிகர உரையாடல்


திருமணம் எப்போது...? காஷ்மீர் மாணவிகளுடன் ராகுல் காந்தி நடத்திய ருசிகர உரையாடல்
x

தனது திருமணம் எப்போது என்பது குறித்து காஷ்மீர் மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்திய உரையாடல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியிடம் பொதுவாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று அவரது திருமணம். 54 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொது மக்களில் இருந்து ஒருவர், "எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, "விரைவில் நடக்கும்" என்று பதில் அளித்தார்.

இந்நிலையில், இந்த தடவை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கல்லூரி மாணவிகளுடன் நடத்திய உரையாடலின்போது, ராகுல்காந்தியிடம் அக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த உரையாடல் வீடியோ, ராகுல்காந்தியின் 'யூ டியூப்' சேனலில் வெளியாகி உள்ளது.

உரையாடலின்போது, "திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தம் வருகிறதா?" என்று மாணவிகளிடம் ராகுல்காந்தி கேட்டார். அவர்கள் அதே கேள்வியை ராகுல்காந்தியிடம் கேட்டனர்.

அதற்கு ராகுல்காந்தி, "திருமணம் செய்து கொள்ளுமாறு இருபது, முப்பது ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து வருகிறேன்" என்று புன்னகையுடன் கூறினார். இதனைத்தொடர்ந்து "திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறீர்களா?" என்று மாணவிகள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி, "நான் திட்டமிடுவது இல்லை. அதுவாக நடந்தால் நடக்கும்" என்று கூறினார்.

"எங்களையும் திருமணத்துக்கு அழையுங்கள்" என்று மாணவிகள் ஒரே குரலில் தெரிவித்தனர். அதற்கு "அழைக்கிறேன்" என்று சிரிப்பொலிக்கு மத்தியில் ராகுல்காந்தி கூறினார்.


Next Story