கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்தில் காங்கிரசின் பங்கு என்ன?; மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கேள்வி
கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்தில் காங்கிரசின் பங்கு என்ன? என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மகதாயி விவகாரம்
காங்கிரஸ் கட்சி மகதாயி விவகாரத்தை முன்வைத்து மாநாடு நடத்துகிறது. கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்தை அமல்படுத்துவதில் காங்கிரசின் பங்கு என்ன?. குடிநீர் திட்டத்திற்காக நாங்கள் கால்வாய் கட்டினால், அதை தடுக்க கோவா காங்கிரஸ் சுவர் கட்டியது. மகதாயி விஷயத்தில் சோனியா காந்தி கோவாவில் பேசும்போது, கர்நாடகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க மாட்டோம் என்று கூறினார்.
மகதாயி விவகாரத்தில் குடிநீர் திட்டத்தை தவிர்த்து விட்டு பிற விஷயங்களை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்குமாறு நாங்கள் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து கூறினோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. மகதாயி விஷயங்கள் அனைத்தையும் தீர்ப்பாயத்திடம் வழங்கினார். இந்த சூழ்நிலையில் எந்த நோக்கத்திற்காக காங்கிரஸ் கட்சி மகதாயி விஷயத்தை முன்வைத்து உப்பள்ளியில் மாநாடு நடத்துகிறது?.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கடந்த 2006-ம் ஆண்டு நான் நாடாளுமன்றத்தில் மகதாயி விவகாரத்தில் குடிநீர் திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரி பேசினேன். கலசா-பண்டூரி திட்டத்திற்கு எதிராக கோவா காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டது. மகதாயி விஷயத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, சித்தராமையா ஆட்சியில் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
மகதாயி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. தற்போது மத்திய அரசு கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 மாதங்களில் இந்த திட்ட பணிகளை தொடங்குவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.