காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜனதாவின் ஊழல் அம்பலப்படுத்தப்படும்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பா.ஜனதாவின் ஊழல் அம்பலப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
குடகு:-
காங்கிரஸ் பிரசாரம்
குடகு மாவட்டம் மடிகேரியில் பி.ஆர்.அம்பேத்கர் பவனில் காங்கிரஸ் ''உத்தரவாத அட்டை'' பிரசாரம் நடந்தது. இந்த பிரசாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மேலிட பொறுக்காளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:-
குடகு மாவட்டம் ஊழல் இயற்கை எழில் கொஞ்சு மாவட்டம். சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான மாவட்டம். இங்கு இந்த ''காங்கிரஸ் உத்தரவாத அட்டை'' பிரசாரத்தில் நான் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். காபி உற்பத்தியில் சிறந்த மாவட்ட குடகு. வெளி நாடுகளுக்கு இங்கிருந்து அதிகளவு காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அனைத்து பெருமையும் நிறைந்த இந்த மண்ணில் ஆளும் கட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மடாதிபதிகள் வரை ஊழல் செய்து வருகிறார்கள்.
40 சதவீதம் கமிஷன்
இந்த ஊழல் விவகாரத்தில் அரசு ஒப்பந்ததாரர்களான சந்தோஷ், ராஜேந்திரன், பிரசாந்த் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்-மந்திரியோ, மந்திரிகளோ, பா.ஜனதா தலைவர்களோ நேரில் சந்திக்கவில்லை. இழப்பீடு தொகை வழங்கவில்லை. மேலும் அவர்கள் அளித்த 40 சதவீதம் கமிஷன் புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் பல முறை கர்நாடக வந்து செல்கிறார். இந்த 40 சதவீதம் கமிஷன் குறித்து எதுவும் பேசவில்லை.
இதே போல சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு, அரசு பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், நில முறைகேடு, என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இதற்கும் தீர்வு காணவில்லை. ஆனால் காங்கிரஸ் இதை விடுவது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் பா.ஜனதாவின் ஊழல் அம்பலப்படுத்தப்படும். தவறு செய்த ஒவ்வொருவருக்கும் தகுந்த தண்டனை கிடைக்கும். இது உறுதி.
காங்கிரஸ் ஆட்சி அமையும்
சித்தராமையாவை கொல்லவேண்டும் என்று அஸ்வத்நாராயணா கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவதிமதிக்கும் வகையில் பா.ஜனதாவினர் பேசியுள்ளனர். இது பா.ஜனதாவின் நம்பிக்கையற்ற தன்மையை காட்டுகிறது. அவர்களுக்கு பதில் கூறவேண்டிய காலம் வெகு தூரம் இல்லை. விரைவில் வரும். காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த முறை மக்கள் பா.ஜனதாவிற்கு தக்க பாடம் புகட்டவேண்டும். வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். காங்கிரஸ் ஆதரவு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.