தேசிய கொடி ஏற்றியபோது அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை
தேசிய கொடி ஏற்றியபோது அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாவேரி (மாவட்டம்) தாலுகா குத்தலா பட்டணாவில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சுதந்திர தினத்தன்று இந்த ஆஸ்பத்திரியில் ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி கொண்டிருந்த வேளையில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து செவிலியர் ஒருவர் அந்த குழந்தை மீது தேசிய கொடியை போர்த்தி விழா நடைபெற்ற இடத்துக்கு எடுத்து வந்தார். தேசிய கொடி ஏற்றிய நேரத்தில் அந்த குழந்தை பிறந்ததால் அக்குழந்தை சிறப்பு வாய்ந்த குழந்தையாக அங்கிருந்தவர்களால் கருதப்பட்டது. மேலும் அந்த குழந்தை சுதந்திர தினத்தன்று பிறந்ததால் அதற்கு சிறப்பான பெயர் ஒன்று வைக்க வேண்டும் என்று அதன் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.