எந்த ஒரு பாஜக தலைவர் மீதாவது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? - ப.சிதம்பரம் கேள்வி


எந்த ஒரு பாஜக தலைவர் மீதாவது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? - ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 14 Jun 2022 12:29 PM IST (Updated: 14 Jun 2022 1:20 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு. இவ்வழக்கில் நேற்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் சுமார் 10 மணிநேரம் விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு.

இந்த விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இன்று 2-வது நாளாகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இன்றும் காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் தொடர்பாக ப.சிதம்பரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? எங்களுக்குப் போராட்டம் நடத்துகிற உரிமை உண்டு.

சட்டத்தை துச்சமாக மதிப்பதாலேயே நாங்கள் போராடுகிறோம். அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதித்து நடந்தால் எங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை. அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பதுதான் பிரச்சினை.

எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது? எஃப்.ஐ.ஆர். இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியாது. முதல் தகவல் அறிக்கையை எங்களுக்கு காட்ட முடியுமா?

என நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜகவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story