நீங்கள் எந்த சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறீர்கள்..? ராகுல் காந்தியின் பதில்
இந்தியா ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகா:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழகத்தின் கன்னியாகுமாரியில் தொடங்கினார். மொத்தம் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த பாதயாத்திரை 1,000 கிலோ மீட்டரை தாண்டியுள்ளது.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடைப்பயணத்தின் இடையில் ஓய்வின் போது ராகுல்காந்தி, தன்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் மக்களுடன் உரையாடி வருகிறார்.
அந்த அடிப்படையில் அவர் மக்களுடன் பேசும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசியதாவது,
கர்நாடக மக்களுடன் உரையாடும் போது ஒருவர் ராகுல்காந்தியிடம், "நீங்கள் எந்த சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறீர்கள்..? என்று கேட்டார். அதற்கு ராகுல் காந்தி "என் அம்மா எனக்கு சன்ஸ்க்ரீன் அனுப்பியுள்ளார். எனினும் அதனை நான் பயன்படுத்தவில்லை" என்று கூறி தோலின் நிறத்தைக் காட்டினார்.
அத்துடன் நடைப்பயணத்தின் இடையில் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்..? என்று கேட்டதற்கு, "உடற்பயிற்சி செய்கிறேன், தொலைபேசியில் என்னுடைய அம்மா, தங்கையிடம் பேசுவேன். மேலும் எனது நண்பர்களிடம் பேசுவதோடு, புத்தகம் படிப்பேன்" என அவர் கூறினார்.