தாயுடன் சேர மறுத்த நிலையில்குட்டி யானை, துபாரேபயிற்சி முகாமிற்கு அனுப்பி வைப்பு
தாயுடன் சேர மறுத்த குட்டி யானை, துபாரே பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மங்களூரு-
தாயுடன் சேர மறுத்த குட்டி யானை, துபாரே பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குட்டையில் விழுந்த யானைகள்
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அஜ்ஜாவாரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 2 காட்டு யானைகள் வெளியேறின. அந்த யானைகள், அந்த கிராமத்தை சேர்ந்த சனத்ராய் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் புகுந்தன. அப்போது பாக்கு தோட்டத்தில் இருந்த குட்டையில் அந்த யானைகள் தவறி விழுந்தன.
இதனால் அந்த குட்டையில் உள்ள தண்ணீரில் சிக்கி பரிதவித்தன. விடிய, விடிய பரிதவித்த நிலையில் மறுநாள் வனத்துறையினர் விரைந்து யானைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு குட்டி உள்பட 3 யானைகளை வனத்துறையினர் மீட்டனர். அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. மற்றொரு குட்டியை மீட்க தாமதம் ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் குட்டையில் இறங்கி அந்த குட்டியையும் மீட்டனர்.
தாயுடன் சேர மறுப்பு
ஆனால் அதற்குள் ஒரு குட்டியுடன் 2 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால், மற்றொரு குட்டி தனியாக நின்றது. 3 மாதமே ஆன அந்த குட்டி யானையை தாயிடம் சேர்க்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று தாயுடன் சேர விட்டு திரும்பி வந்தனர்.
ஆனால் தாயுடன் சேர மறுத்த குட்டி யானை, வனத்துறையினரிடமே திரும்பி வந்தது. அந்த குட்டி யானையை எவ்வளவு அனுப்ப முயன்றாலும் அது வனப்பகுதிக்குள் செல்லவில்லை. இதையடுத்து அந்த குட்டி யானையை யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்து பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
துபாரேவுக்கு அனுப்பி வைப்பு
அதன்படி, நேற்று காலை அந்த குட்டி யானை லாரி, சரக்கு வாகனம் மூலம் குடகு மாவட்டம் துபாரேயில் உள்ள யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அந்த குட்டி யானை சரக்கு வாகனத்தில் ஏற அடம்பிடித்தது. வனத்துறையினர் வலுக்கட்டாயமாக குட்டி யானையை சரக்கு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.