ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கர்நாடக பா.ஜனதா அரசு ஓராண்டு சாதனை விளக்க மாநாட்டை நடத்துவது ஏன்?-காங்கிரஸ் கேள்வி


ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கர்நாடக பா.ஜனதா அரசு ஓராண்டு சாதனை விளக்க மாநாட்டை நடத்துவது ஏன்?-காங்கிரஸ்  கேள்வி
x

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த அரசு ஓராண்டு சாதனை விளக்க மாநாட்டை நடத்துவது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெங்களூரு: கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த அரசு ஓராண்டு சாதனை விளக்க மாநாட்டை நடத்துவது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் நேற்று பெங்களூருவில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊழல் தாண்டவமாடுகிறது

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது முதலே ஊழல் தாண்டவமாடுகிறது. நாட்டின் ஊழல் தலைநகரமாக கர்நாடகம் மாறிவிட்டது. இது தான் பா.ஜனதா ஆட்சியின் சாதனை ஆகும். இந்த அரசு சிறப்பாக செயல்படுவதாக இருந்தால் பிரதமர் மோடி உள்பட பா.ஜனதாவின் அனைத்து தலைவர்களும் நேரில் வந்து பாராட்டிவிட்டு செல்வார்கள்.

விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவர்களின் வருமானம் அதிகரித்ததா?. விவசாயிகள் வாங்கும் உரம், கிருமிநாசினி மற்றும் விதைகள் விலை அதிகரித்துவிட்டது. பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் மீது வரியை விதித்துள்ளனர். இந்த அரசால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

விவசாயிகளுக்கு நிவாரணம்

கொரோனா நேரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக இந்த அரசு அறிவித்தது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு திட்டத்தை அறிவித்தார். அதனால் யாருக்கு பயன் ஏற்படும் என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்பு வழங்குமாறு பிரதமர் மோடி கூறினார்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு மற்றும் லஞ்ச புகாரில் ஒரே நாளில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஒப்பந்ததாரர்கள் திட்ட பணிகளில் 40 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக அரசு மீது புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படாதது ஏன்?. 40 சதவீத கமிஷன் கேட்டதால் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார்.

ஈசுவரப்பா குற்றமற்றவர்

இந்த விசாரணை முடிவடையும் முன்னரே குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மந்திரி ஈசுவரப்பா குற்றமற்றவர் என விசாரணை அதிகாரிகள் நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். கொரோனா பரவல் இருந்த நேரத்தில் கொள்முதல் செய்த மருந்து மற்றும் படுக்கையில் ஊழல் நடைபெற்றது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலாசார போலீஸ் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்படுகிறது.கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் பா.ஜனதா கட்சி ஓராண்டு சாதனை விளக்க மாநாட்டை நடத்துவது ஏன்?.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story