நிதி ஒதுக்கீட்டில் ரூ.60 ஆயிரம் கோடி குறைத்தது ஏன்?
கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.60 ஆயிரம் கோடியை குறைத்தது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உணவு தானியங்கள்
ஏழைகளின் பசியை போக்க மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு உணவு மானியத்தை 31 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது. இதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் அடித்ததுபோல் உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதாக மோடி கூறினார். ஆனால் பட்ஜெட்டில் உர மானிய நிதி ஒதுக்கீடு ரூ.50 ஆயிரத்து 121 கோடி குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்து, அவர்களை பழிவாங்க மோடி அரசு முயற்சி செய்கிறதா?.
வேலையில்லா திண்டாட்டம்
கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ.60 ஆயிரம் கோடியை குறைத்தது ஏன்?. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இப்போது கிராமப்புற வேலை வாய்ப்புக்கும் மோடி அரசு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் சிலிண்டா்களை வழங்குவதாக பா.ஜனதா கூறியது. ஆனால் இன்று அவற்றின் விலை ரூ.1,000 ஆக அதிகரித்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு வழங்கிய மானிய தொகையில் ரூ.2,257 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மோடியின் நண்பர் கவுதம் அதானியின் மோசடியை இன்டர்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா நிதி நெருக்கடியில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதை ஏலத்தில் போய் கொண்டிருக்கிறது.
புறநகர் ரெயில் திட்டம்
வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள், எல்.ஐ.சி.யில் முதலீடு செய்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இவற்றுக்கு கர்நாடகம் வந்துள்ள பிரதமர் மோடி பதில் கூற வேண்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.