குடும்ப தகராறில் மனைவி படுகொலை; விவசாயி கைது


குடும்ப தகராறில் மனைவி படுகொலை; விவசாயி கைது
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா டவுனில் குடும்ப தகராறில் மனைவி படுகொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா துங்கா நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தும்மள்ளி பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ஷோபா(வயது 50). பிரகாஷ் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் பிரகாசுக்கும், அவரது மனைவி ஷோபாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் ஷோபா தனது கணவரை பிரித்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ஷோபாவை சரமாரியாக தாக்கினார்.

இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த ஷோபா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அப்பகுதி மக்கள் துங்கா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரகாசை கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story