பா.ஜனதா பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனைவி கதறல்
வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பா.ஜனதா பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீதர்-
பீதர் மாவட்ட பா.ஜனதா பிரமுகர் மல்லேஷ். இவரது மனைவி சாதனா. இந்த நிலையில் தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சாதனா, பீதர் போலீசில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சாதனா அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் மல்லேஷ் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் பீதர் டவுன் மைலூர் கிராசில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை மற்றும் பா.ஜனதா தலைவர்கள் படத்துடன் வாழ்த்து பேனர் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கன்னட ராஜ்யோத்சவா ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த சாதனா அப்பகுதியில் வந்ததும், மல்லேசின் வாழ்த்து பேனரை திடீரென்று கிழித்து எறிந்தார்.
உடனே பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். இதனால் அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் பேனரை கிழித்ததற்காக என்னை சமாதானப்படுத்த வேண்டாம் என்று ஆவேசமாக கூறினார். மேலும் ஊர்வலத்தில் வந்த பா.ஜனதா தலைவர்களிடம், எனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறி கண்ணீர் விட்டு கதறினார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.