சாலையில் உலா வந்த காட்டுயானை
சாலையில் காட்டுயானை உலா வந்தது
சாம்ராஜ்நகர்:
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு புலி மற்றும் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வனப்பகுதி வழியாகத்தான் மாதேஸ்வரன் மலைப்பகுதியும் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் காட்டுயானைகள் அடிக்கடி அங்கிருந்து வெளியேறி சாலைகளில் உலா வரும் சம்பவங்கள் நடக்கின்றன. அதுபோல் இன்று காலையிலும் மாதேஸ்வரன் மலையில் கொனனகெரே கிராஸ் பகுதியில் ஒரு காட்டுயானை நின்று கொண்டிருந்தது.
திடீரென அந்த காட்டுயானை அவ்வழியாக வந்த வாகனங்களை விரட்டியது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் காட்டுயானை இருந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் தானாகவே சென்றுவிட்டது.