ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்தது
பந்திப்பூர் வனப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்தது. அந்த யானையின் உடல் கபினி அணை அருகே குழித்தோண்டி புதைக்கப்பட்டது.
மைசூரு: பந்திப்பூர் வனப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்தது. அந்த யானையின் உடல் கபினி அணை அருகே குழித்தோண்டி புதைக்கப்பட்டது.
'போகேஸ்வரன்' யானை
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையை சுற்றி பந்திப்பூர், நாகரஒலே வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கபினி அணையின் பின்புறம் உள்ள நாகரஒலே, பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அந்த யானைக்கு 'போகேஸ்வரன்', 'கபினி' என பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்தது. அதாவது கபினி அணைக்கு பின்புறம் சுற்றித்திரிவதாலும், பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள போகேஸ்வரர் கோவில் பகுதியில் சுற்றித்திரிவதாலும் இந்த பெயர்களால் அந்த காட்டு யானை அழைக்கப்பட்டு வந்தது.
ஆண் யானையான போகேஸ்வரன் மிக நீளமான தந்தங்களை உடையது. அதாவது இது, ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும். அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.
சாதுவான குணம் கொண்டது
மிகவும் சாதுவான இந்த போகேஸ்வரன் யானை, அடிக்கடி பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி பாதையில் வந்து நிற்கும். இந்த யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக செல்லும் குணம் கொண்டது. பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி வருபவர்களுக்கு இந்த போகேஸ்வரன் யானை காட்சி அளித்து வந்தது.
சுற்றுலா பயணிகளும் அந்த யானையையும், அதன் தந்தங்களையும் பார்த்து வியந்து, அதனை செல்போன், கேமராக்களில் படம் எடுத்து செல்வார்கள். அந்த யானை சுற்றுலா பயணிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல், அவர்களுக்கு போஸ் கொடுக்கும். சொல்லப்போனால், போகேஸ்வரன் யானையை பார்த்து ரசிக்கவே பல சுற்றுலா பயணிகள் பந்திப்பூர் வனப்பகுதிக்குள் சபாரி செல்ல வருவார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
உயிரிழந்தது
இந்த நிலையில் 68 வயதான போகேஸ்வரன் யானை, பந்திப்பூர் வனப்பகுதியில் நேற்று செத்து கிடந்தது. அதாவது, நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்துக்குட்பட்ட குன்றே வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள போகேஸ்வரர் கோவில் அருகே 'போகேஸ்வரன்' காட்டு யானை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வன ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அவர்களும், அது 'பாேகஸ்வரன்' யானை தான் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து அதேப்பகுதியில் யானையின் உடலை கபினி அணை அருகே குழித்தோண்டி புதைத்தனர். பின்னர் வனத்துறையினர் காட்டு யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வருத்தம் அளிக்கிறது
இகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 68 வயதான இந்த போகேஸ்வரன் யானை, உடல் நலக்குறைவால் செத்துள்ளது.
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட இந்த யானை செத்தது வருத்தத்தை அளிக்கிறது. நீளமான தந்தங்களால் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் அந்த யானை செத்துள்ளது என்றார்.