விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x

ஒசதுர்கா அருகே விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிக்கமகளூரு:-

காட்டு யானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் ஒசதுர்காவில் உள்ள மாடதகெரே கிராமம். இந்த கிராமத்தையொட்டி, வாணி விலாஸ் அணை உள்ளது. மேலும் ஜானகல் வனப்பகுதியும் இந்த கிராமத்தின் அருகேயுள்ளது. இந்நிலையில் இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டுயானைகள், விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி வனத்துறையினருக்கு விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்துவிட்டனர்.

ஆனால் இதுவரை வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் காட்டுயானைகள் வாணி விலாஸ் அணை அருகேயுள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து விளைநிலத்திற்கு செல்லவில்லை. வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளை நிலத்திற்கு செல்லவேண்டாம்

இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரி சுஜாதா தலைமையிலான அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள் காட்டுயானைகள் நடமாட்டத்தால் விளை நிலத்திற்குள் செல்ல முடியவில்லை. நெல், தக்காளி, வாழை, கத்திரிக்காய் போன்ற விளை பயிர்களை பறிக்க முடியாமல், திணறி வருகிறோம். காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுத்தால் மட்டுமே இந்த விளை பயிர்களை நாங்கள் பறிக்க முடியும்.

இல்லையென்றால் அவை அழுகி நாசமாகிவிடும். எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். இ்ல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் யானைகள் நடமாட்டத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் அதுவரை யாரும் விளை நிலத்திற்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து விவசாயிகள் அமைதியாகினர். மேலும் விளை நிலத்திற்கு செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.


Next Story