இலவச ரேஷனை இரு மடங்காக உயர்த்துவோம் - காங்கிரஸ் மீண்டும் உறுதி
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் தற்போதைய தானிய ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷனில் 5 கிலோ உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பா.ஜனதா அரசு வழங்கி வரும் இந்த உணவுப்பொருட்களை இரு மடங்காக அதிகரிப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். இதை காங்கிரஸ் கட்சி நேற்று மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
கட்சியின் பொச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கார்கேயின் இந்த கருத்தை தனது எக்ஸ் தளத்தில், "இந்தியாவின் ரேஷன் வினியோகம் தொடர்பாக பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் மீண்டும் பொய்களை கூறியுள்ளனர். இது தொடர்பான உண்மையான சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம். மன்மோகன் சிங் அரசு கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 80 கோடி ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. அதை ஒரேயொரு முதல்-மந்திரி மட்டும் எதிர்த்தார், அப்போதைய குஜராத் முதல்-மந்திரி (நரேந்திர மோடி). பிரதமராக தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ஐ அமல்படுத்த மோடி எதுவும் செய்யவில்லை.
கொரோனா தொற்றின்போது எங்கள் சமூக வளர்ச்சி திட்டங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி திடீரென புரிந்து கொண்டார். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பிரதமர் கரிப் கல்யான் அன்ன யோஜனா என மாற்றி ஒரு இலவச ரேஷன் திட்டத்தை செயல்படுத்தினார். இதில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை 2021-ம் ஆண்டு நடத்தாததால் குறைந்தபட்சம் 14 கோடி இந்தியர்களுக்கு இந்த பலன் மறுக்கப்பட்டது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் புறக்கணித்ததால் அவர்களை பழிவாங்கும் நோக்கில், அந்த மக்களுக்கு அன்னபாக்யா திட்டத்தின் கீழ் காங்கிரஸ் அளித்த 10 கிலோ இலவச ரேஷன் உத்தரவாத திட்டத்தை மோடி நாசப்படுத்தினார்.
ஆனாலும் மாநில காங்கிரஸ் உறுதியாக இருந்து மாநிலம் முழுவதும் அந்த திட்டத்தை அமல்படுத்தியது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அன்னபாக்யா திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவோம். இதன் மூலம் தற்போது தனிநபர் பெற்று வரும் 5 கிலோ உணவுப்பொருள் இரு மடங்காக உயர்த்தப்படும்" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.