பா.ஜனதாவில் சேரமாட்டேன்; விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் - குலாம்நபி ஆசாத் அறிவிப்பு
பா.ஜனதாவில் சேரமாட்டேன். விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரசில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் குலாம்நபி ஆசாத். காஷ்மீர் மாநில முதல்-மந்திரி, மத்திய மந்திரி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
அவர் காங்கிரசில் உட்கட்சி சீர்திருத்தம் தேவை என்று குரல் கொடுத்த அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய குழுவை சேர்ந்தவர். கடந்த 26-ந் தேதி அவர் காங்கிரசில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் குலாம்நபி ஆசாத் நேற்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி நாள்தோறும் மூழ்கி வருகிறது. தலைவர்கள் விலகி வருகிறார்கள். காஷ்மீரில் 90 சதவீத தலைவர்கள் என்னுடன் வந்து விட்டனர். முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் வந்து விட்டனர்.
காஷ்மீரில் உள்ள 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் என்னுடன் வந்துள்ளனர். நான் கட்சி தொடங்காவிட்டால், அவர்கள் பா.ஜனதாவிலோ, வேறு கட்சியிலோ சேர்ந்திருப்பார்கள்.
காங்கிரசை சரி செய்ய கட்சி தலைமைக்கு நேரம் இல்லை. கட்சியின் அடித்தளம் பலவீனமாகி விட்டது. எந்த நேரத்திலும் வீழ்ச்சி அடையும். எனவே, நானும், வேறு சில தலைவர்களும் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தோம்.
காங்கிரசுக்கு எனது வாழ்த்துகளை மட்டுமே தெரிவிக்க முடியும். ஆனால், அக்கட்சிக்கு எனது வாழ்த்துகளை விட மருந்துகள்தான் தேவை. அந்த மருந்துகளை டாக்டர் கொடுப்பதற்கு பதிலாக, மருத்துவ உதவியாளர் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் பிரச்சினை.
ராகுல்காந்தியை தலைவர் ஆக்குவதற்கு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொணடோம். அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. அதற்கான திறனும் இல்லை.
பா.ஜனதா
நான் பா.ஜனதாவில் சேர மாட்டேன். அதில் சேருவது காஷ்மீரில் எனது அரசியலுக்கு பயன்படாது.
பா.ஜனதாவின் கைப்பிடியில் சிக்கியவர்கள்தான் இந்த தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
காஷ்மீர் சட்டசபை தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படு்ம். எனவே, அங்கு விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன். அங்குள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.
நான் தேசிய அளவிலான திட்டம் எதுவும் வகுக்கவில்லை. இனிவரும் நாட்களில் அதுபற்றி முடிவு செய்வேன் என்று அவர் கூறினார்.
கட்சிக்கு துரோகம்
இதற்கிடையே, குலாம்நபி ஆசாத் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
காங்கிரசில் நீண்ட காலம் பணியா்றறிய குலாம்நபி ஆசாத்துக்கு அந்த கட்சி மீது அவதூறு கூறும் வேலை அளிக்கப்பட்டுள்ளது. அவர் துரோக செயலில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் தன்னைத்தானே குறைத்துக்கொண்டுள்ளார். தனது துரோகத்தை ஒவ்வொரு நிமிடம் நியாயப்படுத்துகிறார்.
அவரை எளிதாக அம்பலப்படுத்த முடியும். ஆனால், அவர் அளவுக்கு கீழே இறங்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.